
2010ஆம் ஆண்டு கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், சரக்கு கையாளும் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது சென்னை அமர்வு நீதிமன்றம்.
14 ஆண்டுகள் கழித்து, முக்கிய சாட்சியமே பிறழ் சாட்சியாக மாறிய நிலையிலும், மிக முன்னணி சரக்கு நிறுவன உரிமையாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மந்தவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும், அவர்களது கார் ஓட்டுநர் கண்ணன், கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ஜான், செந்தில் உள்ளிட்டோருக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி தஸ்நீம் தண்டனை விதித்துள்ளார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து, கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபாவுடன் நெருங்கிப் பழகிய கார் ஓட்டுநர் ஹேமகுமார் என்கிற பாபுவை கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2010ஆம் ஆண்டு பாபு கடத்தப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் வைத்து ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்தது தீபா என்பதும், பிறகு விசாரணையின்போது அவர் பிறழ் சாட்சியாக மாறியபோதும் அவர் அளித்த வாக்குமூலமே, கொலையாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பாபு காணாமல் போகிறார். இதில், தனது தந்தை மற்றும் சகோதரன் மீதுதான் சந்தேகம் இருப்பதாக பாபுவின் பெற்றோரிடம் தீபா கூறுகிறார். தொடர்ந்து காவல்நிலையத்தில் பாபா காணாமல் போனதாக புகார் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, கொடைக்கானலில் பாபுவின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணமூர்த்தியும் பிரதீக்கும் கைது செய்யப்படுகிறார்கள்.
முதலில் வாக்குமூலம் அளித்த தீபா, விசாரணையின்போது காவல்துறையினர் மிரட்டித்தான் தந்தை மற்றும் சகோதருக்கு எதிராக சாட்சியளித்ததாகக் கூறினார். ஆனால், இதனை நீதிபதி ஏற்கவில்லை. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க மற்றொரு காரணமாக, சாட்சியங்கள் முன்னலையில், பிரதீக் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதில்லாமல், குற்றவாளிகள், இரண்டு கார்களில், பாபுவின் உடலை எடுத்துக்கொண்டு கொடைக்கானல் சென்றபோது அவர்கள் காருக்கு பெட்ரோல் போட்ட ரசீது மற்றும் சுங்கச் சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களாக அமைந்தன.
இந்த வழக்கு, அரசு தரப்பில், முக்கிய சாட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றத்தை நிரூபிக்காமல், 'சூழ்நிலை ஆதாரங்களின்' அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறது.
தீர்ப்பளித்த நீதிபதி, அரசுத் தரப்பில் அளித்த சாட்சிகள், ஆவணங்கள், ஆறு பேரும் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டதை நிரூபிக்கிறது, கொலை செய்ததன் தொடர் சங்கிலி நிகழ்வுகள் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த சங்கிலி எங்கும் உடைபடவில்லை, ஒவ்வொரு குற்றவாளியின் தொடர்பையும் அரசு தரப்பு சாட்சிகள் மூலம் நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.