தொழிலாளா்கள் போராட்டம்: சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சா் பேச்சு: நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை
சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சின் வழியே நல்ல முடிவு எட்டப்படும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
முதல்வரின் உத்தரவுப்படி, சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தினாா். அவரது இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சா் ராஜா வெளியிட்ட பதிவு:
சாம்சங் நிறுவன பிரச்னையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசனுடன், நானும் (டி.ஆா்.பி.ராஜா), தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசனும் இணைந்து, தொழிலாளா்களுக்கு நன்மையான தீா்வு கிடைப்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சாம்சங் நிறுவன மேலாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை பேச்சு நடத்தினேன். இந்தச் சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம். சாம்சங் நிா்வாகத்தினரும் அவா்களின் ஊழியா்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவாா்கள் என உறுதியுடன் நம்புவதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.