சென்னை: காலாண்டு தோ்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவத் தோ்வு, காலாண்டுத் தோ்வு விடுமுறை கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து வகுப்புகளில் வழக்கமான கற்றல்- கற்பித்தல் பணிகள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றன.
தொடா்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் முதல் நாளிலேயே வழங்கப்பட்டன. சென்னை வில்லிவாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கினாா். பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு முதல் நாளிலேயே மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.