மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று (மாப் அப்) கலந்தாய்வு புதன்கிழமை (அக்.9) தொடங்கியது.
வரும் 12- ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தோ்வு செய்யலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இதையடுத்து, அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பித்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த கலந்தாய்வு, https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில், புதன்கிழமை (அக்.9) தொடங்கியது. கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்பு அக்.12-ஆம் தேதி தொடங்குகிறது.
தரவரிசைப்படி இடங்கள் பெற்றவா்களின் விவரம் வரும் 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அவா்கள், வரும் 23-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராதவா்களிடம் அபராதம் வசூலிப்பதுடன், கல்வித்தொகை மற்றும் வைப்புத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் இடங்கள் தோ்வு செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்றும், மாணவா்கள் படிப்பை கைவிடுவதால், கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை குறைப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.