ரத்தன் டாடா மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், புதன்கிழமை இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
டாடா நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவடையச் செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ரத்தன் டாடா. 1991 முதல் 2012 வரையில் டாடா குழுமத்தின் தலைவராக அவர் பதவி வகித்து வந்தார்.
அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30-க்கும் அதிகமான நிறுவனங்களை ரத்தன் டாடா நிர்வகித்து வந்தார். உலகின் முன்னணி தொழிலதிபராக இருந்தபோதும், கோடீஸ்வரர்களின் பட்டியலில் அவர் எப்போதும் இடம்பெற்றதே இல்லை; இதற்கு டாடா குழுமத்தின் 66 சதவீத லாபம் அறக்கட்டளைக்கு பயன்படுத்தப்படுவதுதான் காரணம். இதன் மூலம் கல்வி, மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
டாடா குழுமங்களின் தினசரி செயல்பாடுகளில் இருந்து அவர் விலகினாலும், டாடா அறக்கட்டளைகளுக்கு மட்டும் தலைமை வகித்து வந்தார்.
1996-இல் டாடா தொலைத்தொடர்பு சேவையையும், 2004-இல் டாடா கன்சல்டென்ஸி நிறுவனத்தையும் தொடங்கினார். இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
2009-இல் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நனவாக்க ரூ.1 லட்சத்தில் டாடா நேனோ காரை அறிமுகம் செய்தார்.
கரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கியவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் திரு. ரத்தன் டாடா அவர்கள் காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
இத்துயர்மிகு தருணத்தில்,அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நமது தேசத்திற்கும் மக்களுக்கும் ரத்தன் டாவின் பங்களிப்புகள் அளவிட முடியாதது.
வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும். அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும்.
இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செயல்கள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல்
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.
தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும்.
மறைந்த ரத்தன் டாடா குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த ரத்தன் டாடாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மல்லிகாஜூன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது, தெளிவான ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறை தலைமைக்கு ஒத்தவராக விளங்கியவர். லட்ச கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் விளங்கியவர் மற்றும் நாட்டை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கியவர் ரத்தன் டாடா. அவரது அன்புக்குரியவர்களுக்கு என அனுதாபங்கள்.
ராமதாஸ் இரங்கல்
பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
நாட்டின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டா விலக்கி விட்டு எழுத முடியாது. நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் நாட்டின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழ்ந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.
சுந்தர் பிச்சை இரங்கல்
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசிச் சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய தொலைநோக்கு பார்வை என்னை கேட்கத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் தீவிரமான தொண்டு கொள்கையையும், சிறந்த குணத்தையும் விட்டுச் செல்கிறார்.
இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழிநடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தவர். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
பாரிவேந்தர்
இந்திய ஜநநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கொடை வள்ளல் ரத்தன் டாடா; அனைத்து துறைகளுக்கும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு டாடாவின் மறைவு பேரிழப்பாகும். ரத்தன் டாடா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் டாடா குழும ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடா என்னுடைய தனிப்பட்ட கதாநாயகன், என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த ஒருவர். நாட்டை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்புகள் என்றென்றும் நவீன இந்தியாவின் பொக்கிஷம்.
ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருள் செல்வத்தில் இல்லை மாறாக அவரது நேர்மை, தேசபக்தி,பணிவு மற்றும் நெறிமுறைகளில் உள்ளது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “சில மனிதர்கள் தலைமைப் பண்பு, வெற்றி மற்றும் மரபுகளை நமக்கு கற்றுத் தரும் வாழும் புத்தகங்களாக உள்ளனர். மிக அற்புதமான, மக்கள் எளிதில் அணுகக்கூடிய மனிதர்கள், நம்மை ஊக்குவித்து வழிநடத்துகிறார்கள்.
இந்தியா தனது உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.