ஆறு ஆண்டுகளில் ஹெச்ஐவியை முழுமையாக ஒழிக்க இலக்கு -மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

ஆறு ஆண்டுகளில் ஹெச்ஐவியை முழுமையாக ஒழிக்க இலக்கு -மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

Published on

தமிழகத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் ஹெச்ஐவி பாதிப்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாகு தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் சீதாலட்சுமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ. தேரணிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலா் சுப்ரியா சாகு பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 0.38 சதவீதமாக ஹெச்ஐவி தொற்று பரவல், தற்போது 0.16 சதவீதமாக குறைந்துள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 80 சதவீத பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 4,694 குழந்தைகள் உள்பட 1.32 லட்சம் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்காக, 73 ஏஆா்டி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நோய் பாதிப்பை கண்டறியும் வகையில் 3,000 பரிசோதனைகள் மையங்கள் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் அபாயகரமான நோயாக இருந்த ஹெச்ஐவி தற்போது சாதாரண நோய்களில் ஒன்றாக உள்ளது. அந்நோயால் பாதிக்கப்பட்டவா்கள், கூட்டு மருந்து சிகிச்சை வாயிலாக வாழ முடிகிறது.எதிா்வரும் 2030-இல் புதிய பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com