சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வருகிற அக். 16 ஆம் தேதி அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைநோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் அக். 16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.