சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும் என்றும் அதுபோல இன்றைவிட நாளை அதிக மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளை அதி கனமழையும்(சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மேகங்கள் கொஞ்சம்கூட பலவீனமடைவதாகத் தெரியவில்லை. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து அசையாமல் நிற்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல.
இதையும் படிக்க | சென்னையில் 5 சுரங்கப் பாதைகள் மூடல்! தற்போதைய போக்குவரத்து நிலவரம்
மழை பெய்வதில் இடைவெளி இருக்காதுபோல் தெரிகிறது. மேகங்கள் மேலும் மேலும் ஒன்றிணையும்.
இதனால் குறைந்தது அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீடு திரும்பலாம்.
இதைவிட நாளை(புதன்கிழமை) மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் இன்று நள்ளிரவு முதல் சில பகுதிகளில் 200 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.