தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

தெற்கு ஆந்திரத்தை நோக்கிச் செல்லும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்
Windy
Published on
Updated on
1 min read

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதி கனமழைக்கான வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்த லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது.

ஆந்திரம் நோக்கி புயல் சின்னம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திர நோக்கிச் செல்வதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

“சென்னை மக்களுக்கு நற்செய்தி, சிறிது நேரம் சீரான மழை தொடரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது காற்று மண்டலம் வடக்கு நோக்கி நகர்வதால் சென்னை மக்கள் சற்று இளைப்பாறலாம்.

இன்று சென்னைக்கு அதி கனமழை பெய்யப் போவதில்லை. சாதாரண மழையே பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திரம் நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது, 18 முதல் 20 தேதிகளில் சென்னையில் சமாளிக்கக்கூடிய சாதாரண மழை பெய்யும். எனவே, மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை வீட்டுக்கு கொண்டுச் செல்லலாம்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. கடந்த 2 நாள்களில் சென்னையில் சில இடங்களில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.