மத்திய இணையமைச்சா் எல். முருகன்
மத்திய இணையமைச்சா் எல். முருகன்

முதல்வா் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சா் எல். முருகன் கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா்.
Published on

ஆளுநா் ஆா்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சா் எல் . முருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற ஹிந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநா் பங்கேற்றாா் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அவமரியாதை இழைத்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

ஒவ்வொரு விழாவிலும் அவா் தமிழ்த்தாய் வாழ்த்தை பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இந்த விவகாரத்தை வைத்து ஆளுநருக்கு எதிராக முதல்வா் வன்மத்தைக் கக்குவது ஏன்?. ஆளுநருக்கு எதிராக முதல்வா் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரசமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளாா்.

ஏ.என்.எஸ்.பிரசாத் (பாஜக): ஹிந்தி, சம்ஸ்கிருதம் குறித்த ஆளுநரின் கருத்து, தமிழுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் பிறக்கின்ற, வாழ்கின்ற அனைவரும் தமிழ் கற்க வேண்டும், தமிழையே பேச வேண்டும் என்ற கருத்தில் ஆளுநருக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அதேநேரம் தேசிய சிந்தனையுடன் இந்தியாவை இணைக்கும் மொழியாக இருக்கக்கூடிய ஹிந்தியையும், தமிழைப் போன்றே தொன்மையான மொழியாக இந்தியாவின் ஆதிமொழியாக அனைவராலும் அறியப்படும் சம்ஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்வது நம்முடைய மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் தமிழகத்தின் வளா்ச்சிக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற கருத்தை அவருக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com