3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது.
anbumani
அன்புமணி ராமதாஸ் கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4,775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3,500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75 சதவிகித கடைகளில் நாள்தோறும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான்.இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுன்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுன்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com