tn schools
கோப்புப்படம்Center-Center-Chennai

தமிழகத்தில் இளம் பருவத்தினரில் 50% பேருக்கு ரத்த சோகை! - அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரில் 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்.
Published on

தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரில்(10-19 வயது) 50% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.

இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையால், நடத்தைகளில் மாற்றம், கவனக் குறைவு, வளர்ச்சியில் தாமதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். மேலும், சோர்வு, வெளிர் தோல், நகங்கள் உடைதல் உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்திக்கலாம்.

சிறுவர்களுக்கு இதர மருத்துவக் காரணங்களும் சிறுமிகளுக்கு மாதவிடாய் உள்ளிட்ட காரணங்களாலும் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால் ரத்த சோகை வரலாம்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (2019-2021) நாட்டில் ரத்த சோகை பாதிப்பு சிறுவர்களில் 59%, சிறுமிகளில் 31% என்ற அளவில் உள்ளது.

தமிழகத்தில் இளம்வயதினரில் பெண்களில் 52.9% ஆகவும், ஆண்களில் 24.6% ஆகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து மாநில பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், 'தமிழகத்தில் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் ரத்த சோகை குறித்த விரிவான தரவுகள், குறிப்பாக இளைஞர்களிடம் ஏற்படும் பிரச்னைகள் குறித்த தரவுகள் இல்லை' என்று பொது சுகாதார இயக்குனர் டி.எஸ். செல்வவிநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2023, மே மாதம் மற்றும் 2024 மார்ச் மாதத்துக்கு இடையே இளம் பருவத்தினரிடையே (10-19 வயது) ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இது பாலினம், இருப்பிடம் மற்றும் ரத்த சோகையின் தீவிரம் ஆகியவை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், ‘அனீமியா முக்த் பாரத்’ என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுமார் 19.15 லட்சம் இளம் பருவத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆய்வில் 48.3% பேருக்கு ரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதில் 54.4% சிறுமிகள் மற்றும் 41% சிறுவர்கள்.

ரத்த சோகை உள்ள இளம் பருவ ஆண்களில், 59.1% பேர் லேசான ரத்த சோகை, 40.2% பேர் மிதமான ரத்த சோகை, 0.7% பேர் கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிறுமிகளில், 50.9% பேருக்கு லேசான ரத்த சோகை, 47% பேருக்கு மிதமான ரத்த சோகை, 2.1% பேருக்கு கடுமையான ரத்த சோகை இருந்தது.

(லேசானது: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சிறுமிகளுக்கு 11 -11.9 g/dL சிறுவர்களுக்கு 11 - 12.9 g/dL ; மிதமானது: 8 - 10.9 g/dL ; அளவு 8 g/dL -க்கும் குறைவாக இருந்தால் கடுமையான ரத்த சோகை)

தமிழகம் முழுவதும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்தும் 50% பேருக்கு அதிகமாக ரத்த சோகை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சியில் அதிகபட்சமாக 84%, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் தலா 70%, கடலூர் 61% என்ற அளவில் இருந்தது.

கடுமையான ரத்த சோகை பெரும்பாலான மாவட்டங்களில் 1%-க்கும் குறைவாகவே இருந்தது. கோவில்பட்டி, திருவள்ளூர் பகுதிகளில் மட்டும் தலா 2% பதிவாகியுள்ளது.

எனவே, 10 முதல் 19 வயது வரையுள்ள இளம் பருவத்தினரிடம் ரத்த சோகை குறித்து அரசு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com