
சென்னை: சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 97 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுா்வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியூஎம்எஸ்), ஹோமியோபதி (பிஹெச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு, 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரப்பப்பட்டன.
இதேபோன்று, முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரா்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தலா 5 இடங்களும் நிரம்பின.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 17 இடங்களில் ஒரு இடம் மட்டும் நிரப்பப்பட்டதால், மீதமுள்ள 16 இடங்கள் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.22) தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.