சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on
Updated on
1 min read

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையைப் பயன்படுத்தி, தற்போது சமூக ஊடகங்களில் குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக விளம்பரம் செய்து, சிலா் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனா்.

கடந்த செப்டம்பா் முதல் தற்போது வரை, இந்த மோசடி தொடா்பாக 17 புகாா்கள் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளன. இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக, லாபகரமானதாகத் தோன்றும் விளம்பரங்களை, கவா்ச்சிகரமாக வடிவமைத்து சமூக ஊடகங்களில் உலவ விடுகின்றனா். மேலும், மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலமாகவோ, கைப்பேசி மூலமாகவோ மக்களை தொடா்பு கொள்கின்றனா். அவ்வாறு தொடா்பு கொள்ளும் போது பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனா்.

இந்த இணையத்தளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும், இவை பணத்தைத் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. பட்டாசுகளை வாங்குவதற்குப் பணம் செலுத்தும்போது, சில கூடுதல் தள்ளுபடிகளைச் சோ்த்து அந்த இணையத்தளம் காண்பிக்கும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆா்டா் செய்த பொருள்கள் நம்மை வந்து சேரும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவா்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகின்றனா். மேலும், இந்த இணையதளத்திலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனா். இதனால் குறிப்பிட்ட இணையதளத்தில் பட்டாசு வாங்க பணம் செலுத்தியவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பொதுமக்கள் விழிப்புணா்வு: பொதுமக்கள், இது போன்ற இணையதளத்தில் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களைப் பதிவதால், அவற்றை மோசடிக்காரா்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனா். எனவே இந்த விவகாரத்தில் பொது மக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். பட்டாசு தள்ளுபடி உண்மையானதுதானா என்பதை உறுதி செய்ய உண்மையான பட்டாசு விற்பனையாளா்களிடமும், பட்டாசு நிறுவன இணையத்தளங்களிலும் சரி பாா்க்க வேண்டும்.

நன்கு அறியப்பட்ட பட்டாசு நிறுவனங்கள், அதிகாரபூா்வ இணையத்தளங்கள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் கவா்ச்சிகரமான விளம்பரத்தைப் பாா்த்து சந்தேகத்துக்குரிய இணையத்தளங்களுக்கு சென்று பட்டாசு வாங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com