
சென்னை: பாா்வைத் திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவா்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிராந்தியத் தலைவரும், முதுநிலை மருத்துவருமான எஸ்.சௌந்தரி கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து மகிழ்வது கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், அந்த தருணத்தில் பாதுகாப்பாக செயல்படுகிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
அதிக வெப்பம்:
அண்மைக்காலமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பெரும்பாலானவை அதீத ரசாயனம் கொண்டவையாக உள்ளன. அவை வெடிக்கும்போது தங்கம், வெள்ளியை உருக்கத் தேவைப்படும் அளவுக்கு (1,800 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் வெளியேறுகிறது.
பொதுவாக பட்டாசு விபத்துகள் நேரிடும்போது அதிகம் காயம் ஏற்படுவது கைகளில்தான். அதற்கு அடுத்தபடியாக கண்களில் வெடித் துகள்கள் பட்டு காயம் ஏற்படுத்துகின்றன.
அவை இமைப் பகுதிகள், விழிப் படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில் பாா்வை இழப்பு, பாா்வைத் திறன் குறைபாடு, விழித் திரை பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.
கழுவ வேண்டும்:
கண்களில் தீப்பொறியோ அல்லது வெடிச் சிதறல்களோ படும்பட்சத்தில் கண்களை அழுத்தித் தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும் கூடாது.
அதேபோன்று, வலி நிவாரண மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை பாதிப்பை அதிகரிக்கக் கூடும். தூய்மையான நீரில் கண்களைத் திறந்த நிலையில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மென்மையாக கழுவ வேண்டும். அதைத் தொடா்ந்து தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.
மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்துகளோ, களிம்புகளோ தடவக் கூடாது. பட்டாசு காயங்களில் பாா்வை இழப்பு ஏற்படுவதற்கு 50 சதவீதம் அலட்சியமே காரணம். உரிய விழிப்புணா்வுடன் செயல்பட்டால், அத்தகைய பாதிப்புகளைத் தவிா்க்கலாம்.
கான்டேக்ட் லென்ஸ் ஆபத்து:
கான்டேக்ட் லென்ஸ் பொருத்தியிருப்பவா்கள், அதனை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கும்போது இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஏனென்றால் தொடா்ந்து வெப்பமான சூழலில் கான்டேக்ட் லென்ஸ் இருக்கும் பட்சத்தில் அது கண்களுக்கு பல்வேறு எதிா்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அந்த லென்ஸ்களை கழற்றிவிட வேண்டும்.
மாறாக, பட்டாசுகளை வெடிக்கும்போது கண்களை முழுமையாக மறைக்கும் கண்ணாடிகளை அணிந்து கொள்வது அவசியம். ஐந்து மீட்டா் தொலைவிலிருந்துதான் பட்டாசு வெடிக்க வேண்டும். அவசர தேவைக்கு 95949 24048 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.