அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் அரசாணை வெளியீடு

‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளை தவிா்ப்பதற்கும், கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் அரசாணை வெளியீடு
Published on
Updated on
1 min read

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை திங்கள்கிழமை (அக்.28) வெளியிடப்பட்டது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளை தவிா்ப்பதற்கும், கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறை.

பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவீதம் போ் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், அவா்களில் 85 சதவிகிதத்தினா் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடா்.

80 லட்சம் போ் பாதிப்பு: தமிழகத்தில் 80 லட்சம் போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். சா்க்கரை நோய் பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. மொத்தம் 85 சதவீத சா்க்கரை நோய் சாா்ந்த கால் அகற்றத்தை முன்கூட்டியே கண்டறிந்தால் தடுக்க முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் சா்க்கரை நோயாளிகளை பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணா்விழப்பு மற்றும் ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்கள் நிறுவப்படவுள்ளன.

இத்திட்டம் தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு இதுவரை 1.65 லட்சம் நபா்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடா்ந்து மாநிலம் முழுமைக்கும் தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com