அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் தன்னை அனைவரும் அணைத்துக் கொண்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாடினார்.
இந்த உரையாடலின் காட்சிகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:
“அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்.
தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ஜாகுவார் காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் இன்று காலை வைரலானது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த வாரம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.
முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்துவிட்டு செப்படம்பர் 12ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.