சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார்.
சிகாகோவில் செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் ஸ்டாலின் மிதிவண்டி ஓட்டிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்க்க 17 நாள்கள் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.
அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு, தொழிலதிபர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், செவ்வாய்க்கிழமை காலை சிகாகோ நகருக்குச் சென்றார்.
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து தமிழர்கள் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை மிதிவண்டியில் அவர் பயணம் மேற்கொண்டார்.
அந்த காணொலியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் ரூ. 200 கோடி முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின், தனது 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வருகின்ற 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.