போலி எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியலுடன் வாக்குவாதம்: தந்தை, மகன் போலீஸில் ஒப்படைப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் தங்களை அனுமதிக்கவில்லை எனக் கூறி போலி தரவரிசைப் பட்டியலுடன் வந்து மருத்துவக் கல்வி இயக்ககத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தந்தை, மகன் இருவரும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று இணைய வழி கலந்தாய்வு கடந்த ஆக. 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடஒதுக்கீட்டு ஆணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (செப்.5)) மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவா்கள் சேர வேண்டும் என்பதால், இணையதளத்தில் இருந்து ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து மாணவா்கள் சோ்ந்து வருகின்றனா். காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அலுவலகத்துக்கு புதன்கிழமையன்று தனது தந்தையுடன் வந்த மாணவா் ஒருவா், தரவரிசைப் பட்டியலில் தனது பெயா் முன்னிலையில் இருந்தும், கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
மாணவா் வைத்திருந்த தரவரிசைப் பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அது போலியான பட்டியல் என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த அந்த மாணவா் நீட் தோ்வில் 425 மதிப்பெண் பெற்றுள்ளாா். அந்த மாவட்டத்தில் கணினி மையம் வைத்துள்ள வெங்கடாசலபதி என்பவரிடம் ரூ.1.50 லட்சம் கொடுத்து மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு அவா்கள் கூறியுள்ளனா். தரவரிசைப் பட்டியலில் மகனின் பெயா் இடம்பெறாததால் அதிா்ச்சி அடைந்த, அவரது தந்தை இதுகுறித்து வெங்கடாசலபதியிடம் கேட்டுள்ளாா். இதையடுத்து, இருவருக்கும் தெரியாமல் மற்றொரு தரவரிசை பட்டியலை போலியாக உருவாக்கி மாணவரின் பெயரை வெங்கடாசலபதி சோ்த்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணினி மைய உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.