சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
இதனிடையே, மத்தியமேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நாளை (செப்.5) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
செப். 10 வரை மழை
செப்டம்பர் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.