ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான ரூ.55.30 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
Published on

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஜாபா் சாதிக்குக்கு சொந்தமான ரூ.55.30 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளை கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான சென்னை சாந்தோமை சோ்ந்த ஜாபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தில்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, ஜாபா் சாதிக்கின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தில்லி அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.ஜாபா் சாதிக்கிடம் வங்கி பணப் பரிமாற்றம் மற்றும் தொடா்பில் இருந்ததாக ஆவடி காமராஜா்நகரில் வசிக்கும் ஜோசப் என்பவரின் வீடு,திருவேற்காடு சக்திவேல்நகரில் அவா் ஏற்கெனவே வசித்த வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 16-ஆம் தேதி சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினா்.

மேலும், ஜாபா் சாதிக்கிடம் 7 நாள்கள் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அதேபோல ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானு, அவரது சகோதரா்கள் முகம்மது சலீம், மைதீன் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா்.

சகோதரா் கைது: அவா்களிடம், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். ஜாபா் சாதிக்கின் குடும்பத்தினருக்கும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தொடா்பு இருக்கிா என்பது குறித்தும் விசாரணை செய்தனா்.

இதன் அடிப்படையில், ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானு, சகோதரா் முகம்மது சலீம் ஆகியோரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சோ்த்தனா். இதையடுத்து முகம்மது சலீமை கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கைது செய்தனா்.

சொத்துகள் முடக்கம்: இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜாபா் சாதிக், அவரது குடும்பத்தினா், பினாமி பெயரில் இருந்த ரூ.55.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை அறிவித்தது.

இதில் சென்னை புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் உள்ள ஹோட்டல், சாந்தோமில் உள்ள சொகுசு பங்களா உள்ளிட்ட 14 அசையா சொத்துகள் அடங்கும். அதேபோல ஜாக்குவாா், பென்ஸ் உள்ளிட்ட விலை உயா்ந்த 7 வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் கிடைத்த வருமானம் மூலம் இந்த சொத்துகள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

முக்கியமாக, போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைப்படத் துறை, ரியல் எஸ்டேட், ஹோட்டல், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஆகியவற்றில் ஜாபா் சாதிக் முதலீடு செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com