விநாயகா் சதுா்த்தி: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 அமைப்புகள் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகா் சிலைகளை வைத்து வழிபட உள்ளன.
முன்னதாக, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கு உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், தீயணைப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும், காவல் துறையின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் 3 வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.
விநாயகா் சிலைகளை அமைப்பது தொடா்பாகவும், சிலைகளைக் கரைப்பது தொடா்பாகவும் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிலைகளை அமைப்பதற்கும், நீா்நிலைகளில் கரைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் துறை அதிகாரிகள் இந்து அமைப்பு நிா்வாகிகளிடம் எடுத்துக் கூறினா்.
13,000 இடங்களில் சிலை: விநாயகா் சதுா்த்தியையொட்டி, சுமாா் 13,000 இடங்களில் 35,000 விநாயகா் சிலைகளை அமைக்க காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகா் சிலைகள் சனிக்கிழமை அமைக்கப்பட்ட பின்னரே, சரியான எண்ணிக்கை விவரம் கிடைக்கும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் 1,519 விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகா் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் 2 தன்னாா்வலா்களை சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. விநாயகா் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிபந்தனைகளைக் கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும், தங்களது நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா். காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும் நபா்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஒரு லட்சம் போலீஸாா்: சென்னையில் அமைக்கப்படும் விநாயகா் சிலைகளை செப்டம்பா் 11, 14, 15 ஆகிய தேதிகளில் ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைக்க இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இந்து முன்னணி உள்பட அமைப்புகளின் விநாயகா் சிலைகள் ஊா்வலம் 15-ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. விநாயகா் சிலைகளை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடை மேடை ஆகிய இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸாரும், சென்னையில் 15,000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
கடந்த ஆண்டு விநாயகா் சிலை அமைப்பு, ஊா்வலத்தில் பல்வேறு விதிமுறைகள் மீறல் தொடா்பாக 111 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டன. இதில் 23 வழக்குகள் மத வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.