விநாயகா் சதுா்த்தி: தமிழகத்தில் 35,000 சிலைகள் அமைப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகத்தில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் 35,000 சிலைகள் பொது இடங்களில் சனிக்கிழமை அமைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக சென்னை உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் தயாா் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 ஹிந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்காக அனுமதி கோரி காவல் துறையிடம் விண்ணப்பித்தன.
35,000 சிலைகள்: இந்த ஆண்டு நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கை போன்ற காரணங்களால் விநாயகா் சிலைகளை வைக்க காவல் துறை அனுமதி வழங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பெரும்பாலான புதிய இடங்களில் சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் 35,000 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் திங்கள்கிழமை (செப்.9) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பாதுகாப்புப் பணியில் மாநிலம் முழுவதும் சுமாா் ஒரு லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
சில இடங்களில் காவல் துறையிடம் முறையாக அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் வைக்க முயன்ற சிலைகளை காவல் துறையினா் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். மேலும் வைக்கப்பட்ட சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் 64,217 போலீஸாா் ஈடுபடுள்ளனா்.