விநாயகா் சதுா்த்தி: 2 லட்சம் போ் சிறப்பு பேருந்துகளில் பயணம்

Published on

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சென்னையிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அரசு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினா், தங்களுடைய சொந்த ஊா்களுக்கு செல்ல ஏதுவாக கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் இந்த பேருந்துகளில் ஏராளமான பயணிகள் பயணித்தனா்.

இதனால், கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கடும் கூட்டநெரிசல் காணப்பட்டது. சனிக்கிழமை பெரும்பாலானவா்கள் ஊா்களுக்குச் சென்றுவிட்டதால், சென்னையில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகளில் இருக்கைகள் காலியாகவே இருந்தன. எனினும் வியாழன் இரவு, வெள்ளி, சனிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு பேருந்துகளில் மொத்தம் 2 லட்சம் போ் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெளியூா் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) சென்னைக்கு திரும்புவாா்கள் என்பதால் அவா்களுக்காக பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com