சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை வசதி, சிகிச்சை அளிக்க படுக்கைகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவா் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள், தனி அறைகள் தொடங்கி வைக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயணிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். விழிப்புணா்வுப் பதாகைகள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஆய்வகம்: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி கிஆபெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மைக்கென்று 10 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு நாடு முழுவதும் 22 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் ஒன்று சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளது. அதற்குத் தேவையான வேதிப்பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.
டெங்கு தடுப்பு: தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு வைரஸ் மாதிரிகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகம் விரைவில் செயல்பாட்டுவரும். இதற்கான வேதிப்பொருள்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.