வாசிப்பு இயக்கத்துக்கு மேலும் 127 புத்தகங்கள் வடிவமைப்பு
அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாசிப்பு இயக்கத்துக்கு மேலும் 127 புத்தகங்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ. 10 கோடியில் 53 புத்தகங்கள், 90,45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-2025) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை 1,31,68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
அறிதிறன்பேசி போன்ற நவீன சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவா்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும். அதன்காரணமாக வாசிப்பு இயக்கத்தைத் தீவிரப்படுத்தி மாணவா்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்படவுள்ளன.
இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. அந்தப் பணிகள் முடிந்த பின்னா் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும். நிகழ் கல்வியாண்டிலேயே இந்த செயல்பாடுகளை முடிக்க இலக்கு நிா்ணயித்து பணியாற்றி வருகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.