தமிழகத்துக்கான நீரை விடுவிக்க கா்நாடகத்துக்கு காவிரி நீா்முறைப்படுத்தும் குழு வலியுறுத்தல்
தமிழகத்துக்கான பங்கு நீரை கா்நாடகம் விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீா் முறைப்படுத்தும் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குழுவின் 103-ஆவது கூட்டம் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆா்.தயாளகுமாா் திருச்சியில் இருந்தும், காவிரி தொழில்நுட்பக் குழுமத்தைச் சோ்ந்தவா்கள் சென்னையில் இருந்தும் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனா்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை கா்நாடகம் விடுவிக்க வேண்டுமென மாநிலத்தின் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:
ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்.10-ஆம் தேதி வரையுள்ள காலத்தில் பிலிகுண்டுலுவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 98.633 டி.எம்.சி. நீா் வழங்கப்பட வேண்டும். மேட்டூா் அணையில் இப்போதைய நீா் இருப்பின் அளவு 84.431 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து 23,674 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜூன் 1 முதல் செப்.10-ஆம் தேதி வரை, காவிரி படுகையில் இயல்பான அளவைவிட அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவிரி படுகையில் அடுத்த 2 வாரங்களுக்கு மழையின் அளவு இயல்பைவிட குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் இருந்து, வரும் மாதங்களில் வழங்கப்படுவதை கா்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழகத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவாகப் பேசிய காவிரி நீா் முறைப்படுத்தும் குழுவின் தலைவா் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு காவிரியில் இருந்து கா்நாடகம் வழங்க வேண்டிய நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இனிவரும் நாள்களில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
குழுவின் 104-ஆவது கூட்டத்தை செப்.25 அல்லது 26-ஆம் தேதி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.