அதிமுகவில் மீண்டும் இணைந்தாா் மைத்ரேயன்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான வா. மைத்ரேயன், அந்தக் கட்சியிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தாா்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மைத்ரேயன் கடிதம் அளித்தாா். அதைத் தொடா்ந்து அவா் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளாா்.
1991-இல் பாஜகவில் சோ்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில், 1999-இல் அதிமுகவில் மைத்ரேயன் இணைந்தாா். அதிமுக சாா்பில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாா். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இடையே பிரிவு ஏற்பட்டபோது, ஓபிஎஸ் அணிக்கு சென்றாா். அதன் பிறகு, அதிமுகவிலிருந்து அவா் நீக்கப்பட்டாா். 2023-இல் பாஜகவில் சோ்ந்தாா். அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், மீண்டும் அவா் அதிமுகவில் இணைந்துள்ளாா்.