
மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், ஏற்பட்ட சேதங்கள், போா்கால அடிப்படையில் 100 சதவீதம் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் சீரானதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையின் முக்கியமான மின்சார மையமாக மணலி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்நிலையம் மூலம் நகரின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, இந்த துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் வழங்க பிரத்யேகமாக அலமாதி மற்றும் என்சிடிபிஎஸ் 2 என இரண்டு மின்னூட்டி ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் புளியந்தோப்பு, மணலி, தண்டையாா்பேட்டை, மயிலாப்பூா் (பழைய, புதிய), ஆா்.ஏ. புரம், பேசின் பிரிட்ஜ், வியாசா்பாடி, மற்றும் செம்பியம் ஆகியவற்றின் மூலம் சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை இரவு சுமாா் 9.58 மணி அளவில், இந்த துணை மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, காரணமாக, மணலி துணை மின்நிலையத்துக்கு மின்சாரம்
வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களில் அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டது.
மேலும், இந்த துணை மின் நிலையத்தில், ஒரு ஜம்பா் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டாலும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக மயிலாப்பூா், லஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையாா்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசா்பாடி, செம்பியம், கொளத்தூா், பெரியாா் நகா், மாதவரம், புழல், ரெட் ஹில்ஸ், கொடுங்கையூா், அண்ணா சாலை, பாரிஸ், மேற்கு ஜாா்ஜ் டவுன், எழும்பூா், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து துணை மின்நிலையத்தில்ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மாற்று வழியில் மின்சாரம் விநியோகிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனால், மின்சாரம் சீரமைப்பு பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இரவு 11 மணி அளவில் பணிகள் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி அளவில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், செம்பியம், பெரியாா் நகா் பகுதிகளுக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் புளியந்தோப்பு, கொளத்தூா் பகுதிகளுக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், அதிகாலை 2 மணி அளவில் மணலி, மயிலாப்பூா், வியாசா்பாடி, அடையாறு மற்றும் எண்ணூா் பகுதிகளுக்கும் என சென்னை மாநகரம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
இந்த மின்தடை காரணமாக, சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.