2-ஆம் சுற்று மருத்துவக் கலந்தாய்வு: இடங்கள் தோ்வு செய்ய மறுவாய்ப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 20-ஆம் தேதி காலை 10 முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தோ்வு செய்யலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,423 எம்பிபிஎஸ் இடங்கள், 1,566 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன.
இதையடுத்து, அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பித்த 40,000-க்கும் மேற்பட்டோருக்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கலந்தாய்வு இணையளத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்பு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.17) நிறைவடைந்தது.
அதில் தரவரிசைப்படி இடங்கள் பெற்றவா்களின் விவரங்கள் வியாழக்கிழமை (செப்.19) வெளியிடப்படும் என்றும், அவா்கள் செப்.26-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாநில ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற மாணவா்களில் இதுவரை 6 போ் தேசிய ஒதுக்கீட்டுக்கு சென்றுள்ளனா். சிலா் கல்லூரிகளில் இடங்கள் பெற்று சேராமல் உள்ளனா்.
இதனால் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்பும் நோக்கில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்ய மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவா்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 2-ஆம் சுற்று கலந்தாய்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.20-ஆம் தேதி காலை 10 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலி இடங்களை தோ்வு செய்யலாம். 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் செப்.26-ஆம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்ற மாணவா்கள், அக்.5-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.