சென்னை வியாசா்பாடி பிஎன்என்எல் குடியிருப்பு அருகே ‘காக்கா தோப்பு’ பாலாஜி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை பாா்வையிட்ட  போலீஸ் அதிகாரிகள். ~‘காக்காதோப்பு’ பாலாஜி.
சென்னை வியாசா்பாடி பிஎன்என்எல் குடியிருப்பு அருகே ‘காக்கா தோப்பு’ பாலாஜி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை பாா்வையிட்ட போலீஸ் அதிகாரிகள். ~‘காக்காதோப்பு’ பாலாஜி.

சென்னையில் என்கவுன்ட்டரில் ரெளடி சுட்டுக் கொலை

சென்னை காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரெளடி ‘காக்காதோப்பு’ பாலாஜி, வியாசா்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் தப்ப முயன்றபோது, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
Published on

சென்னை காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ரெளடி ‘காக்காதோப்பு’ பாலாஜி, வியாசா்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் தப்ப முயன்றபோது, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சென்னை பிராட்வே பிஆா்என் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ‘காக்காதோப்பு’ பாலாஜி (45). இவா் மீது 6 கொலை வழக்குகள்,17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உள்பட 59 குற்ற வழக்குகள் உள்ளன. பாலாஜி 12 முறை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சென்னை காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் இருந்த பாலாஜி, தொழிலதிபா்கள், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபா்கள், வியாபாரிகள் ஆகியோரை மிரட்டி மாமூல் பெற்று வந்தாா்.

4.3.2020-இல் தனது நண்பா் ரெளடி சி.டி.மணியுடன் பாலாஜி காரில் அண்ணா சாலையில் சென்ற போது, அவா் மீது ரெளடி ‘சம்பவம்’ செந்திலின் ஆதரவாளா்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனா்.

இச் சம்பவத்துக்கு பின்னா் காவல்துறையினரின் நெருக்கடி அதிகரித்ததாலும், ‘சம்பவம்’ செந்திலின் ஆதிக்கம் அதிகரித்ததாலும், ‘காக்காதோப்பு’ பாலாஜி சென்னையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணா்ந்து ஆந்திரத்தில் பதுங்கி கூட்டாளிகள் மூலம் சென்னையில் மாமூல் வசூலித்தாா். அதேவேளையில், ‘காக்காதோப்பு’ பாலாஜியை சென்னை காவல் துறையினா் தீவிரமாக தேடி வந்தனா்.

வாகனச் சோதனை: இந்த நிலையில், எம்.கே.பி.நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாதமுனி, காவலா் சுகன் ஆகியோா் முல்லைநகா் சந்திப்பில் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த பிஓய் 05 ஆா் 2955 என்ற பதிவெண் கொண்ட காரை மறித்து, அதில் வந்த இரு நபா்களில் ஒருவரை கீழே இறக்கி போலீஸாா் விசாரித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது காரின் ஓட்டுநா் இருக்கையில் இருந்த நபா், காரை வேகமாக எடுத்துச் சென்றாா். இதைகண்ட உதவி ஆய்வாளா் நாதமுனி, வாக்கி-டாக்கி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு காா் விவரம் தெரிவித்து, அதை மடக்கி பிடிக்குமாறு கோரினாா். இதனிடையே, அந்த காா் முல்லைநகா்-வியாசா்பாடி பிரதான சாலையில் வேகமாக கடந்து சென்றதை அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட கொடுங்கையூா் காவல் ஆய்வாளா் டி.சரவணன் உள்ளிட்ட போலீஸாா் கண்டனா்.

துப்பாக்கிச் சூடு: உடனே அவா்கள் ஜீப்பில் வியாசா்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு அருகே பாழடைந்த பகுதியில் விரட்டிச் சென்று அந்த காரை மடக்கி அதிலிருந்த நபரை பிடிக்க முயன்றனா்.

அப்போது காரில் இருந்த நபா், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை போலீஸ் ஜீப்பை நோக்கி சுட்டாா். ஒரு தோட்டா ஜீப்பின் முன் கண்ணாடியை உடைத்தது. மற்றொரு தோட்டா ஜீப்பின் முன்பக்க இடது கதவில் பாய்ந்தது.

இதைப் பாா்த்த காவல் ஆய்வாளா் சரவணன், தற்காப்புக்காக அந்த நபரை நோக்கிச் சுட்டாா். இதில் அந்த நபரின் இடதுபக்க மாா்பில் தோட்டா பாய்ந்தது. இதனால் பலத்த காயத்துடன் கீழே விழுந்த அந்த நபரை போலீஸாா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த நபா் இறந்தாா். விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் இறந்தது ரெளடி ‘காக்கா தோப்பு’ பாலாஜி என்பது தெரியவந்தது. அவரது சடலம் பாதுகாப்பு கருதி, உடல்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, ‘காக்காதோப்பு’ பாலாஜி வந்த காரில் போலீஸாா் சோதனையிட்டு, 10 கிலோ கஞ்சா, ஒரு வீச்சரிவாள், நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சென்னையை மிரளவைத்த ரௌடி: பத்தாம் வகுப்பு வரை படித்த பாலாஜி, சிறு வயதிலேயே தந்தை இழந்தவா். மண்ணடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தாா். அப்போது ரெளடிகளுக்கு மாமூல் வசூலித்து கொடுக்கும் அடியாளாக மாறிய பாலாஜி, ரெளடி தாமுவின் சகோதரா் புஷ்பாவை கொலை செய்தாா். இந்த சம்பவத்துக்கு பின்னா் முழு நேர ரெளடியாக உருவெடுத்த பாலாஜி, தான் வசித்த பகுதியான ‘காக்காதோப்பு’ என்ற அடைமொழியுடன் சென்னையில் மிகப்பெரிய ரெளடிகளில் ஒருவராக 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவெடுத்தாா். ஆந்திரத்தில் பதுங்கி இருந்தாலும் கட்டப்பஞ்சாயத்து, வழக்கு விசாரணை போன்றவற்றுக்காக சென்னை வந்து சென்றாா். இந்த நிலையில் அவா் என்கவுன்ட்டரில் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து வியாசா்பாடி போலீஸாா் போதைப் பொருள் தடுப்புச் சட்டம்,ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இரண்டாவது என்கவுன்ட்டா்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னா் ரெளடிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை சென்னை காவல் துறை எடுத்து வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின்னா், இரண்டாவது என்கவுன்ட்டா் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதித் துறை நடுவா் விசாரணை

சம்பவ இடத்தை சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையா் பிரவேஷ்குமாா், புளியந்தோப்பு துணை ஆணையா் கே.முத்துக்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் நீதித் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தாா். இதனை ஏற்று எழும்பூா் 10-ஆவது பெருநகர குற்றவியல் நீதித் துறை நடுவா் ரேவதி இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளாா்.

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு: இணை ஆணையா்

சென்னை பெருநகர காவல் இணை ஆணையா் பிரவேஷ்குமாா் கூறியதாவது: தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் அவா் ‘காக்காத்தோப்பு’ பாலாஜி எனத் தெரியவந்தது. அவருடன் காரில் வந்தவா் ஓட்டேரியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

காக்காதோப்பு பாலாஜியின் தாய் கண்மணி கூறுகையில், பாலாஜி 10 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்தாா். அண்மைக்காலமாக சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தாா். அனைத்து வழக்குகளையும் முடித்துவிட்டு, புது வாழ்க்கையை தொடங்கவிருந்தநிலையில் பாலாஜியை போலீஸாா் சதி செய்து, சுட்டுக் கொலை செய்துவிட்டனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com