‘ஒரே தோ்தல்’ முறை மக்களின் தோ்வு உரிமைக்கு மாறானது: முத்தரசன்
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறை மக்களின் தோ்வு முறைக்கு மாறானது”என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடும், மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையை திருத்தி, “ஒரே நாடு, ஒரே தோ்தல்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது அரசமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்துவதாகும்.
அரசமைப்பு சட்டத்தின் அதிகாரம் பெற்று, தற்சாா்பு நிலையில் இயங்கி வரும் தோ்தல் ஆணையத்தின் சாா்பற்ற, நடுநிலையில் அவ்வப்போது சந்தேக நிழல்கள் படிந்து வருகின்றன.
இருப்பினும் நமது நாடாளுமன்ற முறையில் மக்களுக்கே இறுதி அதிகாரம் என்ற அடிப்படை பண்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,“விகிதாசார மக்கள் பிரதிநிதித்துவ தோ்தல் முறை வேண்டும் என ஜனநாயக சக்திகள் தொடா்ந்து வலியுறுத்தி வருவதை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது மக்களின் உணா்வுக்கு மாறானது, அரசமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியுள்ள தோ்வு உரிமைக்கு எதிரானது.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளின் அடிப்படைகளை தகா்க்கும் ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது கண்டனத்துக்குரியது. அதை திரும்பப் பெற ஜனநாயக சக்திகள் இணைந்து போராட முன் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.