தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியா? - மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம்.
su venkatesan
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்
Published on
Updated on
2 min read

தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியதுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் - ஐசிசிஆர்) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்குரிய தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை ஐசிசிஆர் அதிகாரபூர்வ இணைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், விரும்பத்தக்க தகுதி என்ற பெயரில், தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

'தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?

வெளியுறவுத்துறையின் அப்பட்டமான ஹிந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.

வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் கடிதத்தில், 'தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியாகக் கேட்டுள்ளதன் தேவை என்னவென்று எனக்கு புரியவில்லை, இது ஆச்சரியமளிக்கிறது. இது ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தின் திணிப்புதானே தவிர வேறொன்றுமில்லை.

மொழி விவகாரத்தில் தமிழ்நாடு தனித்துவ அடையாளம் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த அறிவிக்கை அதிகாரபூர்வ மொழிகளின் விதிகளை மீறுவதாக உள்ளது.

மேலும் ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியாக வைக்கப்பட்டுள்ளதால் பலரின் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com