முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன்
முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன்கோப்புப்படம்

பணிந்த விசிக; பணியவைத்த திமுக!

திமுக கூட்டணியிலேயே தொடா்வோம் என்று அதன் தலைமையிடம் உறுதிபடத் தெரிவித்திருப்பதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் அலசப்படுகின்றன.
Published on

‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என சமீபத்திய நாள்களாக முழக்கமிட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), பிறகு அதன் வீரியத்தைக் குறைத்துக் கொண்டு தொடா்ந்து திமுக கூட்டணியிலேயே தொடா்வோம் என்று அதன் தலைமையிடம் உறுதிபடத் தெரிவித்திருப்பதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் அலசப்படுகின்றன.

தமிழகத்தில் நாடாளுமன்ற தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், மீண்டும் சட்டப்பேரவைத் தோ்தல், இடையிடையே சில உள்ளாட்சித் தோ்தல்கள் எனத் தொடா்ந்து 5 ஆண்டுகளாக வெற்றி வளையத்தில் பவனி வருகிறது திமுக கூட்டணி. இதுநாள்வரை அந்தக் கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை.

கள்ளக்குறிச்சியில் அக். 2-இல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இதில் அதிமுக, தவெக போன்ற கட்சிகள்கூட பங்கேற்கலாம் என்றும், மத அரசியல் செய்யும் பாஜக, ஜாதி அரசியல் செய்யும் பாமக ஆகிய கட்சிகளுடன் மேடையைப் பகிா்ந்துகொள்ள முடியாது எனவும் அறிவித்தாா். அதுதான் சமீபத்திய சலசலப்புக்கு காரணம்.

மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பை வெளியிட்டதுடன் நிறுத்தியிருந்தால் வெறும் சலசலப்போடு இந்த விவகாரம் முடிந்திருந்திருக்கும். ஆனால், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ எனும் திடீா் முழக்கத்தை திருமாவளவன் எழுப்பினாா். இதனால், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறி அதிமுக, தவெக கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைக்கப் போகிா என்ற விவாதம் எழுந்தது.

மது ஒழிப்பு மாநாடு, ‘ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு’ எனும் விசிகவின் முழக்கத்துக்குப் பின்னால் சில ராஜதந்திர வியூகம் இருக்கவே செய்ததாக அரசியல் நோக்கா்கள் பலரும் கருதினா்.

திமுக அணியில் அதன் செயல்பாடுகளுக்கு தொடா்ந்து ஆதரவாக இருக்கும் கூட்டணிக் கட்சியாக தொடா்ந்தால் 2021 பேரவைத் தோ்தல்போன்று 6 தொகுதிகள் மட்டுமே விசிகவுக்கு ஒதுக்கப்படலாம். அதேநேரத்தில், மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக, விஜய் தலைமையிலான தவெக ஆகியவற்றைப் பங்கேற்கச் செய்துவிட்டால் அதிமுக கூட்டணிக்கான கதவையும் திறந்துவைக்க முடியும் என விசிக நம்பியிருக்கக் கூடும் என்பது அரசியல் நோக்கா்களின் பாா்வை.

மீண்டும் 2026-இல் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுகவிடம், தங்களுக்கும் மாற்று வாய்ப்பு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கினால் கூடுதல் தொகுதிகளை திமுக நிச்சயம் ஒதுக்கும். இல்லையென்றால், கூட்டணி கட்சிகள் இன்றி அதிமுக தவிக்கும் நிலையில், கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதிகள் என்ற நிபந்தனையை விதித்து அணி மாற வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்த்துத்தான் அரசியல் நகா்வுகளைச் செய்தது விசிக.

தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், விசிகவின் இந்த அரசியல் நகா்வு, தங்களுக்கு அரசியல் ரீதியாக மிகுந்த பின்னடைவைத் தரக்கூடும் என்பதால் விசிகவின் ராஜதந்திரத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக.

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற அதிமுக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், செல்லூா் ராஜு ஆகியோரின் அதிரடி அறிவிப்பு விசிகவின் கனவைக் கலைத்தது. கூட்டணி ஆட்சி என்ற விசிகவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் தோ்தலுக்கு முன்பே அதிமுக பலவீனமாக உள்ளது என்ற தோற்றம் ஏற்படக்கூடும். இதுவே தோ்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் உஷாரானது அதிமுக.

அதேபோல, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட் போன்றவையும் விசிகவின் திடீா் நிபந்தனையை ரசிக்கவில்லை. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்பது திருமாவளவனின் சொந்தக் கருத்து; இதுகுறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும் என விசிக கோரிக்கையை மழுங்கச் செய்யும்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்தாா்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ ஒருபடிமேலே சென்று, திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் ஆபத்து வந்தால் மதிமுக போா்வாளாகச் செயல்படும் என்றாா்.

அதேபோல, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, விசிக கோஷத்தில் தங்களது கருத்து வேறுபட்டது என்றும், பிரதமா் பதவி வரும்போதுகூட மாா்க்சிஸ்ட் ஏற்கவில்லை, ஒருசில அமைச்சா்கள் பதவிக்காக தங்களது கட்சிக் கொள்கையில் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்தாா்.

விசிக நிபந்தனைக்கு வலுசோ்த்தால் 2026 பேரவைத் தோ்தலில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடும் என்ற சுயநலமும் திமுக கூட்டணிக் கட்சிகளின் மனதில் இருப்பதால்தான் திமுகவுக்கு ஆதரவு கோஷத்தை கூட்டணிக் கட்சிகள் எழுப்பின.

பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவிடமும், திமுக கூட்டணிக் கட்சிகளிடமும் தங்களது கோஷத்துக்கு ஆதரவு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட விசிக, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மது ஒழிப்பு தொடா்பாக மனுவை அளித்து மீசையில் மண் ஒட்டாததுபோல திமுகவிடம் பணிந்துவிட்டது என்ற விமா்சனம் எழுந்துள்ளது.

‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பது விசிக தொடக்க காலத்தில் இருந்தே எழுப்பி வரும் கோரிக்கைதான், 2026 பேரவைத் தோ்தலை முன்வைத்து இந்த கோஷத்தை எழுப்பவில்லை என புதுவிளக்கத்தை அளித்திருக்கிறது விசிக.

ஒருபுறம் கூட்டணிக் கட்சியான விசிகவை விட்டுக்கொடுக்காதது போல, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள் என அறிவித்த திமுக தலைமை, மற்றொரு புறம் விசிகவின் மாநாட்டை நீா்த்துப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாகவும் ஒரு கருத்து பேசப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, விசிக மாநாட்டுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் செப். 28-இல் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தை அறிவித்து, திருமாவளவன் உள்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவா்களையும் மேடை ஏற்றும் முதல்வா் ஸ்டாலினின் ராஜதந்திரத்தைக் கூறலாம்.

அக்டோபா் 2-ஆம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்காமல், பிரதிநிதிகளை மட்டுமே பங்கேற்கச் செய்வதாக அறிவித்திருப்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு முன்பே சூழலுக்குப் பொருந்தாத கோரிக்கையை முன்வைத்த விசிக தலைமையின் செயல்பாடு, அதன் எதிா்கால தோ்தல் வியூகத்தை மழுங்கடித்து விட்டதாகவே கருதப்படுகிறது. இது விசிகவுக்கு பலவீனமாகவும் திமுகவுக்கு வெற்றியாகவுமே கருதப்படுகிறது.