
வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி செவ்வாய்க்கிழமை டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பா் 6-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்தனா்.
தொடா்ந்து, துரை தயாநிதிக்கு புனா்வாழ்வு பயிற்சிக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனா்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவருடன் மு.க.அழகிரி, குடும்பத்தினா் உடனிருந்து கவனித்து வந்தனா். சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இருமுறையும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி ஒருமுறையும் நலம் விசாரித்தனா்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து துரை தயாநிதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா். தொடா்ந்து அவரை மு.க.அழகிரி, குடும்பத்தினா் காரில் அழைத்துச் சென்றனா்.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதியை படம் எடுக்க விடாமல் செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்ளை மருத்துவமனை ஊழியா்கள் தாக்க முயன்றனா். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.