பட்டாபிராம் புதிய ரயில்வே மேம்பாலம் பகுதியாக இன்று திறப்பு?

பட்டாபிராம் புதிய கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பகுதியாக இன்று திறக்கப்படுகிறது.
பட்டாபிராம் புதிய ரயில்வே மேம்பாலம்
பட்டாபிராம் புதிய ரயில்வே மேம்பாலம்Center-Center-Delhi
Published on
Updated on
2 min read

பட்டாபிராம் அருகே ரூ.52 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒரு பகுதி மட்டும் இன்று திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, இன்று திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது.

ஏற்கனவே, பட்டாபிராம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பகுதி மட்டும் இன்று திறக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூருவர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர், கடந்த வாரம், மேம்பாலத்தை பார்வையிட்டு, திறப்புப் பணிக்கான ஏற்பாடுகளையும் கேட்டறிந்தார். மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு மக்களின் பிரச்னைகள் மற்றும் இன்னும் நிறைவடையாத மற்றொரு வழிப் பாதையை விரைவாக முடிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது ஆட்சியர் உறுதியளித்திருந்தார்.

சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் பட்டாபிராம் அருகேயுள்ள ரயில்வே கேட், ரயில்கள் கடக்கும்போது மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்க புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தொடங்கியது.

இதனால், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் வழியாக முக்கிய நேரங்களில் வாகனங்கள் கடக்க முடியாமல் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நிற்கும் சூழ்நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆவடி முதல், திருநின்றவூர் வரை, கூவம் ஆறு, ஆவடி ஏரி உள்ளிட்ட பகுதிகள் இருப்பதால் மாற்றுப்பாதைகளும் பெரிதாக மக்களுக்குக் கைகொடுப்பதில்லை. தற்போது பல கிராமங்களை சுமார் 10 கிலோ மீட்டர் அளவுக்கு வாகனங்கள் சுற்றிச் செல்கின்றன.

இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆறுவழிச்சாலை திட்டத்தை எதிர்நோக்கி, ரூ.52 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை தொடங்கி கடந்த ஜூன் மாதம் மேம்பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால், ஒத்திவைக்கப்பட்டது. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு என பணிகள் தொய்வுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆறு ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலத்தால், மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர்.

சில பாதுகாப்புக் குறைபாடு பிரச்னைளும் இருந்ததால், அவை கடந்த ஒரு சில மாதங்களாக சரிசெய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஆவடியிலிருந்து திருநின்றவூர் செல்வதற்கான வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டிருப்பதால் இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஓரளவுக்கு போக்குவரத்து சீரடைந்து, இரண்டாவது வழித்தடம் விரைவாகக் கட்டிமுடிக்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டாவது வழித்தடத்தில் மேம்பாலம் கட்டி முடிக்க, கீழே இருக்கும் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு நிரந்தரமாக மூடினால், மேம்பாலம் கட்டி முடிக்கும் வரை, அங்கிருக்கும் போக்குவரத்துநிலை மிகவும் மோசமடையும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com