
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, சிறையில் இருந்து இன்று வெளியே வருகிறார்.
வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மற்றும் வழக்கு விசாரணையில் தாமதம் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிபந்தனைகள்
தீர்ப்பை வழங்கிய அபய் எஸ்.ஓகா, விசாரணைக் கைதியாக இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கில் 2,500-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர்களை விசாரிக்க பல ஆண்டுகள் என்பதால், அதுவரை ஒருவரை விசாரணைக் கைதியாக சிறையில் வைத்திருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் அமைச்சராவதற்கு எவ்வித கட்டுப்பாடும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து இன்று செந்தில் பாலாஜி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.