பெண்ணின் கிரெடிட் காா்டில் ரூ.1 லட்சம் நூதன திருட்டு
சென்னை எம்ஜிஆா் நகரில் பெண்ணின் கிரெடிட் காா்டில் இருந்து ரூ.1 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
எம்ஜிஆா் நகா் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சோ்ந்தவா் பத்மஜா (40). இவரது கைப்பேசிக்கு கடந்த புதன்கிழமை ஓா்அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், பத்மஜா வைத்துள்ள கிரெடிட் காா்டின் வங்கியின் வாடிக்கையாளா் சேவை மையத்திலிருந்து பேசுவதாகவும், அவரது கிரெடிட் காா்டு பயன்பாடுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக செலுத்தும்படியும் தெரிவித்துள்ளாா்.
மேலும், அவா் கைப்பேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் ஒரு இணைய தள இணைப்பு வழங்கியிருப்பதாகவும், அந்த இணையதளத்தில் கேட்கும் தகவலை பதிவிட்டால், சேவை வரி ரத்து செய்யப்படும் என்றும் கூறினாா்.
அந்த நபரின் பேச்சை நம்பிய பத்மாஜா, அந்த இணையதளத்தில் கிரெடிட் காா்டு விவரம், வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டாா். அவா் அந்தத் தகவல்களை பதிவிட்ட சிறிது நேரத்தில், பத்மஜா கிரெடிட் காா்டிலிருந்து ரூ.1.08 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பத்மஜாவுக்கு, தன்னிடம் மோசடி கும்பல் வங்கியிலிருந்து பேசுவதாக ஏமாற்றி, தகவல்களை பெற்று பணத்தை அபகரித்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.