சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணை வழங்கிய நிலையில், அவர் தரப்பில் வழங்கப்பட்ட 2 ஜாமீன் உத்தரவாதங்களையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், செந்தில் பாலாஜியை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் செந்தில் பாலாஜி. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 471 நாள்களாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புழல் சிறையில்..
சென்னை புழல் மத்திய சிறை எண் 2ஆம் வளாக வாசலில் திமுக கட்சித் தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என மேளதாளத்தோடு செந்தில் பாலாஜியை வரவேற்கக் காத்திருக்கும் நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. செந்தில் பாலாஜி விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் ஆஜரானார்.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், அவருக்கு இரண்டு பேர் தலா ரூ.25 லட்சம் பிணை உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட 2 பிணை உத்தரவாதங்களை ஆய்வுசெய்தார். முன்னதாக, விசாரணையின்போது, உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் அளித்த பிணை உத்தரவாதங்களில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 ஜாமீன் உத்தரவாதங்களில் சந்தேகம் உள்ளது. உறவினர்கள் அளித்த ஜாமீன் பத்திரத்தில், ஒருவருக்கு 60 வயதாகிறது. ஆனால், தனக்கு செந்தில் பாலாஜியை 69 ஆண்டுகளாகத் தெரியும் என கூறியிருப்பது எப்படி என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் வாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இதனால், இன்று செந்தில் பாலாஜி வெளியே வருவாரா என்ற கேள்வி எழுந்தது.
பிறகு ஜாமீன் பிணைகளை ஏற்பதாக நீதிபதி அறிவித்ததால், சிக்கல் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.