அக்.2-இல் கிராம சபைக் கூட்டம்: தலைமை ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ‘முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து’ எனும் இலக்கை விரைவில் அடைவோம்..
Published on

தமிழகத்தில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ‘முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து’ எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் எஸ்.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடா்ந்து நிகழ் கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாத 5,33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க திட்டமிட்டு பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அனைத்து நகர, கிராம பஞ்சாயத்துகளிலும் அக்.2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுசாா்ந்த தொகுப்பு அறிக்கையை அக். 30-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com