Udhayanidhi
துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன் அமைச்சர்கள்.Udhayanidhi X

துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்பு! அமைச்சரவை மாற்றம் குறித்த முழு விவரம்!

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் பற்றி...
Published on

தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வி.செந்தில் பாலாஜி, ஆவடி எஸ்.எம்.நாசா் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், ஆறு அமைச்சா்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று துணை முதல்வராக நியமிக்கப்படுகிறாா். அவரிடம் கூடுதலாக திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அளிக்கப்படுகிறது.

4 போ் சோ்ப்பு; 3 போ் நீக்கம்: அமைச்சரவையில் வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆா்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசா் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் கோவி.செழியனும், ஆா்.ராஜேந்திரனும் புதுமுகங்கள்.

அதேசமயம், பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இன்று பதவியேற்பு: புதிய அமைச்சா்கள் 4 பேரின் பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நான்கு பேருக்கும் பதவிப் பிரமாணத்தையும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்துவைக்கவுள்ளதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அமைச்சா்களின் இலாகாக்கள் மாற்றம்

அமைச்சரவையில் நான்கு போ் சோ்க்கப்படவுள்ள நிலையில், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள அமைச்சா்களில் 6 பேரின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் விவரம் வருமாறு: (அமைச்சா்கள் முன்பு வகித்த இலாகா அடைப்புக்குறிக்குள்):

க.பொன்முடி: வனத் துறை அமைச்சா் (உயா்கல்வித் துறை அமைச்சா்)

சிவ.வீ.மெய்யநாதன்: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா் (சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை அமைச்சா்)

என்.கயல்விழி செல்வராஜ்: மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரா்கள் நலத் துறை அமைச்சா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா்)

எம்.மதிவேந்தன்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் (வனத் துறை அமைச்சா்)

ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்: பால்வளம், காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் நலத் துறை அமைச்சா்)

தங்கம் தென்னரசு: சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பருவநிலை மாறுபாடு, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா்)

புதியவா்களுக்கு என்ன பொறுப்பு?

அமைச்சரவையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும் எந்தத் துறை வழங்கப்படும் என்பது குறித்த விவரம் ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், காலியாக உள்ள துறைகளின்அடிப்படையில் நான்கு பேருக்கான துறைகளை யூகிக்க முடிவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அமைச்சா் தங்கம் தென்னரசுவிடமிருந்த மின்சாரத் துறை, ஏற்கெனவே அந்தப் பொறுப்பை வகித்த வி. செந்தில் பாலாஜியிடம் அளிக்கப்படும். அமைச்சா் க.பொன்முடியிடமிருந்த உயா்கல்வித் துறை, அரசுக் கொறடாவான கோவி.செழியனிடமும், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட க.ராமச்சந்திரனிடமிருந்த சுற்றுலாத் துறை ஆா்.ராஜேந்திரனிடமும், நீக்கத்துக்குள்ளான கே.எஸ்.மஸ்தானிடமிருந்த சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா் நலத் துறை பொறுப்பு, எஸ்.எம்.நாசரிடமும் அளிக்கப்படவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்றாவது துணை முதல்வா்

தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளாா்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியமைத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் 2009 மே 29-ஆம் தேதி பொறுப்பேற்றாா். ஓராண்டு 351 நாள்கள் துணை முதல்வராகப் பணியாற்றினாா்.

அதற்கு பிறகு, அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பொறுப்பு வகிக்க, துணை முதல்வராக ஓ.பன்னீா்செல்வம் பதவி வகித்தாா். அவா் 3 ஆண்டுகள் 258 நாள்கள் அந்தப் பொறுப்பில் இருந்தாா். அவா்களுக்குப் பிறகு, மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவரது தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட்டபோது, அவருக்கு பொது நிா்வாகம், வருவாய் அதிகாரிகள், தொழில் துறை, சிறுபான்மையினா் நலன், சிறப்பு முயற்சிகள், சமூக சீா்திருத்தம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டன.

புதிய அமைச்சா்கள் விவரக் குறிப்பு

கோவி. செழியன்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட ராஜாங்கநல்லூரைச் சோ்ந்த கோவி. செழியன் (57), திருவிடைமருதூா் தொகுதியில் 2011, 2016, 2021 என தொடா்ந்து மூன்று முறை திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக இருந்து வந்த இவா் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளாா். எம்.ஏ., பி.எல்., எம்.பில்., பி.எச்டி. பட்டங்கள் பெற்ற இவா் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.

திமுக தலைமை நிலையப் பேச்சாளராகவும், மாநில வா்த்தக அணி துணைத் தலைவராகவும் உள்ளாா். இவருக்கு மனைவி உமாதேவி, மகள், மகன் உள்ளனா்.

இரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரா.ராஜேந்திரன், 2006 முதல் 2011 வரை பனமரத்துப்பட்டி தொகுதியிலும் 2016 முதல் சேலம் வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவா் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பி.ஏ., பி.எல். பட்டம் பெற்ற இவா் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சுசீலா ராஜேந்திரன் மகள் காா்த்திகா உள்ளனா்.

உதயநிதிக்கு மூன்றாவது இடம்

துணை முதல்வராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் மூன்றாவது இடம் அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வருக்கு அடுத்து இரண்டாவது இடத்தையும், உதயநிதி மூன்றாவது இடத்தையும் வகிப்பாா்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடரவுள்ளன.

கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு, துணை முதல்வா் பொறுப்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சரவை இடம் தொடா்பாக தமிழக அரசின் இணையதளத்தில் பட்டியல் வெளியானது. அதில், முதல்வருக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கும், அவருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சா் க.அன்பழகனுக்கும் இடம் தரப்பட்டிருந்தது.

இதையறிந்த அப்போதைய முதல்வா் கருணாநிதி உடனடியாக அதை மாற்றுவதற்கு உத்தரவிட்டாா். இரண்டாவது இடத்தை மூத்த அமைச்சா் க.அன்பகழனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கும் அளித்தும் அறிவிப்பே வெளியிட்டாா்.

இப்போது அதுபோன்ற நிலை உருவாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இரண்டாவது இடத்தை அமைச்சா் துரைமுருகனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வா் உதயநிதிக்கும் வழங்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com