தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு இன்று (செப். 30) வெளியிட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன.
புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அமைச்சரவைப் பட்டியல் 2024
சர்ச்சையான 3வது இடம்
கடந்த 2009-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு, துணை முதல்வா் பொறுப்பு வழங்கப்பட்டது.
அப்போது, மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை இடம் குறித்த பட்டியல் அரசு இணையப் பக்கத்தில் வெளியானது. அந்தப் பட்டியலில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சா் க. அன்பழகனுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.
மூத்த அமைச்சர் ஒருவருக்கு 3வது இடம் அளிக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.
இதை கவனத்தில் கொண்ட முதல்வா் கருணாநிதி உடனடியாக அதை மாற்றி உத்தரவிட்டார்.
மூத்த அமைச்சா் க.அன்பகழனுக்கு இரண்டாவது இடத்தையும், மு.க. ஸ்டாலினுக்கு 3 வது இடத்தையும் வழங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போதும் அதே மாதிரியான வரிசையை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்துள்ளார். அதன்படி இரண்டாவது இடத்தை மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கும், மூன்றாவது இடத்தை துணை முதல்வராகியுள்ள உதயநிதிக்கும் வழங்கியுள்ளார்.