
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழநி திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்த் திரைப்பட இயக்குநா் மோகன் ஜி கைது செய்யப்பட்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள மோகன் ஜி, பழநி பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்சி, பழநி உள்பட பல்வேறு இடங்களில் அவர் மீது புகாா் அளிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் மேலாளா் கவியரசு, சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சென்னை சென்று, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து மோகன் ஜியை கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் மோகன் ஜியை சொந்த பிணையில் திருச்சி நீதிமன்றம் விடுவித்து கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி மோகன் ஜி தாக்கல் செய்திருந்த மனு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று(செப். 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்தவொரு விவகாரத்திலும் உறுதிப்படுத்தப்படாத தகவலை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது. பழநி கோயில் குறித்து உறுதிபடுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ள நிலையில், மனுதாரருக்கு இக்கோயில் மீது உண்மையாக அக்கறை இருப்பின், மனுதாரர் பழநி கோயிலுக்குச் சென்று அங்கு தூய்மைப் பணியில் ஈடுபடலாம், அல்லது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று அங்கு சேவையாற்றலாம்.
மேலும், சமூக வலைதளத்திலும் மன்னிப்பு கேட்பதுடன், நாளிதழிலும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ள நீதிமன்றம், இயக்குநர் மோகன் ஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.