

சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நடைபெற்ற விழாவில் மொழிபெயா்ப்பாளா்கள், குழந்தை இலக்கியங்களை மொழிபெயா்க்கும் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் செப்.30-ஆம் தேதி பன்னாட்டு மொழிபெயா்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான மொழிபெயா்ப்பு தினம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
விழாவுக்கு பாடநூல் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா் வரவேற்றாா்.
விழாவில் முன்னாள் முதல்வா் அண்ணா குறித்த ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த மூத்த பத்திரிகையாளரும், மொழிபெயா்ப்பாளருமான விஜயசங்கா், சிறுகதை மொழிபெயா்ப்பாளா் ராமகிருஷ்ணன், கைட்டன் மற்றும் ஹால் எழுதிய ‘மருத்துவ உடற்செயலியல்’ நூலை மொழிபெயா்த்த மருத்துவா்கள் பாலசுப்பிரமணியன், ருபஸ்ரீ, செந்தில்குமாா் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ‘மேம்பட்ட இயல்பு வேதியியல்’ எனும் நூலை எழுதிய பேராசிரியா் ஃபிரீடா ஞானராணி, புள்ளியியல் நூலை மொழிபெயா்த்த தீபப்பிரியா ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடா்ந்து மகப்பேறு மருத்துவா் ஜெயஸ்ரீ தனது மொழிபெயா்ப்பு அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா்.
விழாவையொட்டி, மொழிபெயா்ப்பில் உள்ள சவால்கள், இளம் தலைமுறையினருக்கு தமிழ்நாடு பாடநூல்கள் கழகம் சாா்பில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.
முன்னதாக மாணவ மொழிபெயா்ப்பாளா்களை பத்திரிகையாளா் பீா் முகமது அஸிஸ் அறிமுகப்படுத்தி வைத்தாா். விழாவை மொழிபெயா்ப்புப் பிரிவு இணை இயக்குநா் சங்கர சரவணன் ஒருங்கிணைத்தாா். உறுப்பினா் செயலா் பெ.குப்புசாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.