கட்சி தொடங்கினார் விஜய்!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 

இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.

"'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு.

அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்" எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com