காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு!

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது புதிய மடாதிபதியாக ச.நாகராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது புதிய மடாதிபதியாக   பொறுப்பேற்ற ச.நாகராஜ்
தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது புதிய மடாதிபதியாக பொறுப்பேற்ற ச.நாகராஜ்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது புதிய மடாதிபதியாக ச.நாகராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் நகர் பெரிய காஞ்சிபுரத்தில் பரமசிவம் தெருவில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடம் செயல்பட்டு வருகிறது. இம்மடத்தின் 233-வது மடாதிபதியாக இருந்து வந்த ஞானப்பிரகாச பராமாச்சாரிய நடராஜன் சுவாமிகள் உடல்நலக் குறைவால் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து மடத்தின் 234-வது மடாதிபதியாக மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த க.சண்முகசுந்தரம், ச.மீனாட்சி தம்பதியரின் 2-வது குமாரர் ச.நாகராஜ்(64) புதிய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் உலர் தாவர காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முன்னதாக மடத்துக்கு முதல் முதலாக வருகை புரிந்த புதிய மடாதிபதிக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மடத்தில் உள்ள மெய்கண்ட ஈஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வின் போது புதிய மடாதிபதி தேர்வுக்குழுவின் தற்காலிகப் பொறுப்பாளர் என்.எஸ்.ஆளவந்தார், ஆலோசனைக்குழு உறுப்பினர் குப்புச்சாமி, சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக நிர்வாகி சிவ.தணிகை மணி, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சிவானந்தம், சிவனடியார் விஜயன் ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மடாதிபதி தேர்வுக் குழுவின் பொறுப்பாளரான என்.எஸ்.ஆளவந்தார் கூறுகையில், 

திருச்சியில் நடந்த அனைத்து சைவ முதலியார் கூட்டத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.நாகராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மடத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் பி.டி.ஆர்.கே.விஜயராஜன் அமைத்த எனது தலைமையிலான குழு புதிய மடாதிபதியாக ச.நாகராஜை தேர்வு செய்துள்ளோம் என்றார். புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ச.நாகராஜ் கூறுகையில் மடம் ஏற்கனவே செய்து வரும் கல்விப்பணி, சமூகப்பணிகள் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com