ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனைக் கொன்று எரித்தவர்கள்!

செங்கல்பட்டில் ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகைக்காக நண்பனைக் கொன்று எரித்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 
ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனைக் கொன்று எரித்தவர்கள்!

செங்கல்பட்டில் ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகைக்காக நண்பனைக் கொன்று எரித்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். 

தன்னுடைய காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக சக வயதுடைய நண்பனைக் கொன்று தான் இறந்ததாக ஊர்மக்களை நம்பவைத்த நாடகத்தையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). உடற்பயிற்சி ஆலோசகரான இவர், தன்னுடைய நண்பர்களான வேலூரைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (32), மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி ராஜன் (30) ஆகிய இருவருடன் சேர்ந்து, தில்லி பாபு என்ற நண்பரைக் கொன்றுள்ளனர். தில்லி பாபு சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர். 

சுரேஷ் காப்பீடு நிறுவனத்தில் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார். அதற்கான பிரீமியம் தொகையை செலுத்திய நிலையில், தான் உயிருடன் இருக்கும்போதே அப்பணத்தைப் பெறுவதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து தன் வயதுடைய, உயரமுடைய ஒருவரின் உடலைத் தேடியுள்ளார். ஆனால் உடல் கிடைக்கவில்லை. 

நண்பனைக் கொல்ல சதித்திட்டம்

இந்நிலையில், தனது பால்ய நண்பரான தில்லி பாபு (38) நியாபகம் வந்துள்ளது. தில்லிபாபு தனது குடும்பத்துடன் 10 ஆண்டுகளாக சுரேஷின் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார்.  இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். 

தில்லி பாபு எண்ணூர் பகுதியில் தனது தாய் லீலாவதியுடன் (69) வசித்து வந்தார். இதனையறிந்த சுரேஷ், மீண்டும் தில்லி பாபுவுடன் பழக்கத்தை நெருக்கமாக்கியுள்ளார். செப்டம்பர் 9ஆம் தேதி தில்லிபாபு வீட்டிற்குச் சென்றுள்லார். தில்லி பாபு பெயிண்டராக வேலை பார்ப்பதால், வெளியூரில் வேலைவந்துள்ளதாகக் கூறி தனது நண்பர்களுடன் சென்று செப்டம்பர் 15ஆம் தேதி மேல்மருவத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றுள்ளார். 

வாகனத்தை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு பாண்டிச்சேரிக்கு பேருந்தில் சென்றுள்ளனர். அங்கு மதுபானங்களை வாங்கிக்கொண்டு அச்சரப்பாக்கம் அருகேவுள்ள அல்லனூருக்குச் சென்றுள்ளனர். அங்கு சுரேஷுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக குடிசை வீடு ஒன்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தனர். 

அந்த குடிசையில் நான்கு பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். முன்பு வைத்திருந்த திட்டப்படி சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக நண்பனான தில்லி பாபுவைக் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குடிசையையும் எரித்துவிட்டு தப்பியுள்ளனர். 

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த இடம் சுரேஷுக்கு சொந்தமானது என்பதால், சுரேஷ் குடும்பத்தாரை காவல் துறையினர் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சுரேஷின் சகோதரி, இறந்திருப்பது சுரேஷ்தான் எனக் கூறியதைத் தொடர்ந்து இந்த வழக்கை தற்கொலை என காவல் துறையினர் முடித்துள்ளனர். 

ஏமாற்றத்தில் முடிந்த சதித்திட்டம்

சுரேஷ் இறந்ததாக நினைத்து, அவரின் குடும்பத்தினர் தில்லி பாபு உடலுக்கு அயனாவரத்தில் இறுதி சடங்குகள் நடத்தியுள்ளனர். சுரேஷின் குடும்பத்தினர் காப்பீடுத் தொகையைப் பெற முயன்றுள்ளனர். ஆனால், தற்கொலை என்பதால் பணம் கிடைக்கவில்லை. 

சுரேஷுன் வேறு நபர் மூலம் காப்பீட்டுத் தொகையைப் பெற முயன்றுள்ளார். ஆனால், தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டுள்ளதால், பணம் தர இயலாது என காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சுரேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடயே வேலைக்குச் சென்ற தனது மகன் இன்னும் திரும்பவில்லை எனக் கூறி செப்டம்பர் 20ஆம் தேதி தில்லி பாபுவின் தாயார் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சதித்திட்டம் அம்பலமானது எப்படி?

தில்லி பாபு குறித்து காவல் நிலையத்தில் இருந்து எந்த தகவலும் வராததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரின் தாயார் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதன்பிறகு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது. 

காவல் துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஒரத்தி காவல் நிலையத்தோடு தொடர்புகொண்டபோது மேலும் பல சம்பவங்கள் வெளிவந்தன. 

அரக்கோணம் அருகேவுள்ள திருவாலங்காடு பகுதியில் சுரேஷ் தனது இரு நண்பர்களுடன் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. காணாமல் போனவரைத் தேடும்போது இறந்ததாகக் கூறப்பட்ட சுரேஷ் கிடைத்ததால், விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர். 

விசாரணையில் கொலை சம்பவம் அம்பலமானது. பின்னர் செங்கல்பட்டுக்கு அழைத்துவரப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர், கடந்த திங்கள் கிழமை வட்டாட்சியர் முன்னிலையில் தில்லி பாபுவின் உடலைத் தோண்டி எடுத்து தடயவியல் ஆய்வுக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். 

காப்பீட்டுத் தொகைக்காக உடன் பழகிய நண்பனைக் கொன்று நாடகாடிய கும்பலின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com