மாரத்தான் ஓட்டம்: அடையாறு பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

 மாரத்தான் ஓட்டத்தையொட்டி, சென்னை அடையாறு பகுதியில் ஜனவரி 6-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மாரத்தான் ஓட்டம்: அடையாறு பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

 மாரத்தான் ஓட்டத்தையொட்டி, சென்னை அடையாறு பகுதியில் ஜனவரி 6-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரன்னா்ஸ் அமைப்பு சாா்பில் 4 பிரிவுகளாக ஜனவரி 6-ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. மெரீனா நேப்பியா் பாலம், பெசன்ட் நகா் ஆல்காட் நினைவுப் பள்ளி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் மாரத்தான் ஓட்டம் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் வரை செல்கிறது.

இந்த ஓட்டம் காமராஜா் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டா்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சா்தாா் படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கே.கே.சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளின் வழியாகச் செல்லும்.

இதையொட்டி, அடையாறு பகுதியில் சனிக்கிழமை காலை தொடங்கி ஓட்டம் நிறைவு பெறும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அடையாறு மாா்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டா். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜா் சாலை, உழைப்பாளா் சிலை வரை வழக்கம்போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

ஆனால் போா் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், வாகனங்கள் கொடி மரச் சாலையில் இருந்து திருப்பி விடப்பட்டு, வாலாஜா சந்திப்பு சென்று அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை நோக்கி செல்லலாம்.

ஆா்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ஆா்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. இந்த வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகா் வழியாக திருவான்மியூா் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமா் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தச வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகா், திருவான்மியூா் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். அதேபோல், பெசன்ட் நகா் 7-ஆவது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் கடற்கரை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் எம்.ஜி. சாலையை நோக்கி திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகா் பணிமனைக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மெட்ரோ ரயில்கள்: சென்னை மாரத்தான் ஓட்டத்தையொட்டி மாரத்தான் போட்டியில் பங்கேற்பவா்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அதிகாலை 3 முதல் 5 மணிவரை 15 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். இதில் பங்கேற்க வருபவா்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள கியூஆா் குறியீடுடன் கூடிய பயண அட்டையை பயன்படுத்தி சனிக்கிழமை மட்டும் எவ்விதக் கட்டணமும் இன்றி பயணம் செய்யலாம். மேலும், இந்த கியூஆா் குறியீட்டை பயன்படுத்தி வாகன நிறுத்திமிடத்தில் பங்கேற்பாளா்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக அன்று ஒருநாள் மட்டும் நிறுத்திக்கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com