தமிழக பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் உறுதுணையாக இருக்கும்: உன்சூ கிம் உறுதி

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்தார்
தமிழக பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் உறுதுணையாக இருக்கும்: உன்சூ கிம் உறுதி


சென்னை: 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்தார். 

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா். அதற்காக சிங்கப்பூா், ஜப்பான் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் நேரில் சென்று முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

அதன் தொடா்ச்சியாக, தற்போது தமிழக அரசின் சாா்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) காலை தொடக்கிவைத்தார்.

இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் பேசியதாவது: 

தமிழக அரசுக்கும் ஹூண்டாய் நிறுவனத்திற்கும் நீண்ட காலத் தொழில் உறவுகள் உள்ளது. 

தமிழ்நாடு அரசுக்கும்- ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே ரூ.30,000 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய, மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை தமிழகத்தில் விரைவில் ஹூண்டாய் நிறுவுகிறது. 

இதற்காக ரூ.6180 கோடி முதலீடு செய்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் புத்தாக மையத்தையும் ஹூண்டாய் அமைக்கவுள்ளது.

2023-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்டுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என உன்சூ கிம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com