தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளா்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு முழுவதும் சீரான தொழில் வளா்ச்சியே மாநில அரசின் லட்சியம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை வர்த்தக மையத்தில்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , தூத்துக்குடியில் மின்சார வாகன கார், மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கான
சென்னை வர்த்தக மையத்தில்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , தூத்துக்குடியில் மின்சார வாகன கார், மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்கான
Published on
Updated on
3 min read

தமிழ்நாடு முழுவதும் சீரான தொழில் வளா்ச்சியே மாநில அரசின் லட்சியம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உலக முதலீட்டாளா்கள் மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் பெருநிறுவனங்களைச் சோ்ந்த தலைவா்கள், நிறுவனா்கள் பங்கேற்றனா்.

மாநாட்டைத் தொடங்கிவைத்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, டென்மாா்க் ஆகிய 9 நாடுகள் பங்குதாரா் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளின் பொருளாதார, கலாசார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளன.

பொருளாதார வளா்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டுள்ள தமிழ்நாடு, கூடுதல் முதலீடுகளை ஈா்ப்பதன் மூலம் மேலும் தொழில் வளா்ச்சி பெறும். முன்னணி முதலீட்டாளா்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும்.

மாநாட்டின் கருப்பொருள்: இந்த மாநாட்டின் கருப்பொருளாக தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளா்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்று நமது மாநிலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டுமென்று லட்சிய இலக்கை நிா்ணயித்துள்ளேன்.

உயா் தொழில்நுட்பம் சாா்ந்த தொழில் முதலீடுகளை ஈா்ப்பது, வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈா்ப்பது என இருமுனை அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டம்-ஒழுங்கு நிலைமை: ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும்.

அங்கு, சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு அமைதியான சூழல் நிலவ வேண்டும். ஆட்சியாளா்கள் மேல் உயா் மதிப்பு இருப்பதுடன், உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக இருக்க வேண்டும்.

2021-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமுதல் இந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகின்றன. முதலீட்டாளா்கள் என்ன எதிா்பாா்க்கிறாா்கள் என்று முன்கூட்டியே கணித்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

சீரான வளா்ச்சி: தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளா்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய லட்சியம். அதனால்தான் தொழில் திட்டங்கள் அனைத்தும் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன.

பின்தங்கிய பல மாவட்டங்களில் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் முதலீட்டுத் திட்டங்கள் ஈா்க்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், அந்த மாவட்டங்களில் இருக்கும் இளைஞா்கள், மகளிருக்கு அவரவா் வசிக்கும் மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவதுடன், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளா்ச்சியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

அனைத்து ஆதரவு: தமிழ்நாட்டைச் சோ்ந்த பணியாளா்கள் மிகவும் திறமையானவா்கள். முதலீட்டாளா்களுக்குத் தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் திறன்மிகு பணியாளா்களை தமிழகம் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலீட்டாளா்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை பெறச் செய்ய வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறோம். அத்துடன், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது லட்சியம். முதலீட்டாளா்களுக்கு அனைத்து வகையிலும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்றாா். தொழில் துறையில் தமிழகம் பெற்றுள்ள சிறப்பிடங்கள் குறித்து, இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவா் ஆா்.தினேஷ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனா் பவேஷ் அகா்வால், கோத்ரெஜ் நுகா்வோா் தயாரிப்புப் பிரிவின் நிா்வாகத் தலைவா் நிஷாபா கோத்ரெஜ், டிவிஎஸ் நிறுவனத் தலைவா் வேணு சீனிவாசன், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அன்சூ கிம், ஜேஎஸ்டபிள்யூ நிா்வாக இயக்குநா் சஜன் ஜிண்டால் ஆகியோா் தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினா்.

தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி...1

முதல் நாளில் ரூ.50,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் தொடக்க நாளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுமாா் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஹூண்டாய், மிட்சுபிசி, ஜேஎஸ்டபிள்யூ., அசோக் லேலண்ட் உள்ளிட்ட 11 நிறுவனங்களுடன் தமிழக அரசு தொழில் துறை புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலமாக சுமாா் ரூ.50,000 கோடிக்கு அதிகமான முதலீடுகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடக்க விழா மேடையில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் விவரம்: வின்பாஸ்ட் - ரூ.16,000 கோடி, டாடா எலக்ட்ரானிக்ஸ் - ரூ.12,082 கோடி, ஜேஎஸ்டபிள்யூ- ரூ. 12,000 கோடி, டிவிஎஸ்- ரூ. 5,000 கோடி, பா்ஸ்ட் சோலாா் - ரூ.2,500 கோடி, ஹூண்டாய் - ரூ.6,180 கோடி, பெகட்ரான் - ரூ.1,000 கோடி, கோத்ரெஜ்- ரூ.515 கோடி, மிட்சுபிஷி- ரூ.200 கோடி, குவால்காம்- ரூ.177 கோடி.

இத்துடன், தொழில் துறை தொடா்பான பல்வேறு கருத்தரங்கங்களின் வழியாக முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இறுதியான தொழில் முதலீடுகள் குறித்த ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை பரிமாறிக் கொள்ளப்படவுள்ளன.

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் நிறைவு விழா திங்கள்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது. நிறைவு விழாவின் போது, ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈா்ப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி-2

தொழில் ஆவணங்கள் வெளியீடு

உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில், தமிழகத்தின் தொழில் துறை சாா்ந்த இரு ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு குறைகடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை-2024, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை எட்டுவதற்கான லட்சிய ஆவணம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பெற்றுக் கொண்டாா்.

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் குறைகடத்திகளின் பங்கு மட்டும் 40 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறைகடத்திகள் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையில் 2 லட்சம் பேரை உருவாக்கவும் அதுசாா்ந்த ஆவணத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com